இதற்குத்தான் ஆசைப் பட்டாயா மகாதேவையா ?
அன்புத் தோழர்களே ! வணக்கம் !
உங்கள் அனைவருக்கும் நன்கு தெரியும் NFPE பேரியக்கம் எந்த ஒரு அரசியல் கட்சியின் அங்கீகரிக்கப் பட்ட தொழிற் சங்கத்துடன் தோன்றிய நாள் முதலே இன்று வரை இணைக்கப் படவில்லை என்று .
பல்வேறு அரசியல் கருத்தோட்டமுள்ள தலைவர்கள் , 1954 முதலே பல்வேறு கால கட்டங்களில் NFPTE இயக்கத்தில் முன்னணித் தலைவர்களாக இருந்தபோதும் அவர்களெல்லாம் தங்களின் தனிப்பட்ட அரசியல் கருத்து என்பது வேறு - NFPTE இயக்கம் என்பது வேறு என்றே நினைத்தார்கள் . உதாரணமாக தோழர் மோசா , தோழர் குப்தா , தோழர் பிரேம் , தோழர் L .A .P ., தோழர் A .S . ராஜன், தோழர். K .G . போஸ் , தோழர். ஆதி , தோழர். N .C .A . ஆகியோரை நாம் பார்க்கலாம் .
தற்போது கூட பல்வேறு மாநிலங்களில் பல்வேறு மாநிலக் கட்சிகளின் கருத்தோட்டமுள்ள தலைவர்கள் NFPE யில் தலைமைப் பொறுப்பில் உள்ளது முன்னணித் தோழர்களுக்கு தெரியும் . பல்வேறுபட்ட கருத்தோட்டமுள்ள லட்சக் கணக்கான உறுப்பினர்களை உள்ளடக்கிய பேரியக்கம் தான் முந்தைய NFPTE - தற்போதைய NFPE ஆகும் . இதன் வலிமையே வேற்றுமையில் - ஒற்றுமை என்பதுதானே !
அதனால் தான் இன்றுவரை அசைக்க முடியாத இரும்புக் கோட்டையாக NFPE இருந்து வருவதும் உண்மை. 60 ஆண்டுகள் இந்திய தேசத்தை ஆண்ட காங்கிரஸ் கட்சி கூட தன்னுடைய INTUC இன் இணைப்பு சங்கமாக FNPO வை உற்பத்தி செய்தும் , இன்று வரை கூட குறைந்த பட்சம் 15% உறுப்பினர்களை GDS சங்கத்தில் பெற முடிய வில்லை .
மூன்று முறை மத்தியில் ஆட்சியை பல்வேறு கூட்டணி வாயிலாகப் பிடித்தும் கூட- இந்தியாவின் மிகப் பெரிய கட்சியான பாரதீய ஜனதாக் கட்சியால் தன்னுடைய BMS சங்கத்தின் அங்கமான BPEF க்கு இன்றுவரை கூட குறைந்த பட்சம் 5% உறுப்பினர்களைப் பெறமுடிய வில்லை .
ஆனால் , இதுவரை எந்த ஒரு தலைவரும் அவரவர்களுக்கு பிடித்த அரசியல் கட்சியின் அங்கீகரிக்கப் பட்ட தொழிற் சங்கத்தில் NFPE பேரியக்கத்தை இணைக்க வேண்டும் என்று எண்ணியதுமில்லை -- அதற்கு எவரும் துணிந்ததும் இல்லை .
இன்றோ........ நேற்று வந்த மகாதேவையா துணிந்து விட்டார் .
லட்சக் கணக்கான GDS ஊழியர்களின் தியாகத்தால் உருவான, இலாக்காவால் அங்கீகரிக்கப் பட்ட மிகப் பெரும் AIPEDEU சங்கத்தை ... நம்மால் உருவாக்கப் பட்ட GDS சங்கத்தை , நம்மில் யாரிடமும் கேட்காமலேயே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அங்கீகரிக்கப் பட்ட தொழிற் சங்கமான AITUC யில் இணைத்துவிட்டார் என்பது மிகப் பெரும் அதிர்ச்சியூட்டும் செய்தியாகும் . செயற்குழுவைக் கூட்டாமலேயே , பொதுக் குழுவைக் கூட்டாமலேயே தன்னிச்சையாக முடிவெடுத்து இணைத்து விட்டார்.
AITUC இன் 40 ஆவது பொதுக் குழு கூட்டம் கடந்த ஜனவரி மாதம் 6 மற்றும் 7 தேதிகளில் கல்கத்தா நகரில் நடைபெற்றது. அதன் நிகழ்வுகளையும் AITUC இல் இணைக்கப்பட்ட சங்கங்களின் பொதுச் செயலர்களையும் பொதுக் குழு உறுப்பினர்களாக அறிவித்து , AITUC இன் பத்திரிக்கையான ' TRADE UNION RECORD' பிரசுரித்துள்ளது . அதன் நகலை கீழே அளித்துள்ளோம்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர். தா. பாண்டியன் , K . சுப்பராயன் , S .S . தியாகராஜன், குருதாஸ் தாஸ் குப்தா, A .B . பரதன் ஆகியோர் பெயர்களுடன் பொதுக் குழு உறுப்பினராக தோழர். S .S . மகாதேவையா பெயரும் பிரசுரிக்கப் பட்டுள்ளது . இணைக்கப் பட்ட FEDERATIONS பட்டியலில் அதன் பொறுப் பாளராக ' மகாதேவையா' பெயர் வந்துள்ளது நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கியது .
இப்படி 'தடி எடுத்தவனெல்லாம் தண்டல் காரன்' என மகாதேவையாவுக்கு பிடித்த அரசியல் கட்சியுடன் நம்மை இணைத்திடவா நாம் செந்நீர் சிந்தி இந்த சங்கத்தை வளர்த்தோம் ! காலம் காலமாக கட்சி சார்பற்ற சங்கம் என்று நாம் கூறி ஊழியர்களை ஒன்று படுத்தி வைத்திருந்த நிலையை இன்று மகாதேவையா வேறுபடுத்தி விட்டதை இன்னும் ஏற்கத்தான் போகிறார்களா அங்கிருப்போர் ?
இப்படியே போனால் AIPEDEU வின் உத்திர பிரதேச மாநிலச் செயலர் சமாஜ் வாடி கட்சியுடன் அந்த மாநிலச் சங்கத்தை இணைப்பார் .... ஒரிஸ்ஸாவில் உள்ள AIPEDEU மாநிலச் செயலர் பிஜு ஜனதா தளத்துடன் அந்த மாநிலச் சங்கத்தை இணைப்பார் . பீகாரில் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளத்துடன் அந்த மாநில AIPEDEU இணைக்கப் படும். தமிழகம் மட்டும் சளைத்ததா என்ன என்று கூறி இங்குள்ள 'ஜாம்பவான்கள்' தி. மு.க. வின் PEPU சங்கத்தில் இங்குள்ள AIPEDEU சங்கத்தை இணைப் பார்கள் .
இப்படியே போனால் என்னாகும் ? அரசியல் கட்சிகளின் அடி வருடிகளைத்தான் நாம் பார்க்க முடியும் .... நம் தலைவர்களின் தியாகத்தால் வளர்ந்த சங்கம் சிதையுண்டு போகும். இதனை ஏற்பீர்களா தோழர்களே ? அல்லது
மகாதேவையாவைத் தூக்கி எறிந்துவிட்டு ... NFPE பதாகையை உயர்த்திப் பிடிப்பீர்களா ? இன்னமும் AIPEDEU சங்கத்தை நம்பியுள்ள சாதாரண அடிமட்டத் தோழர்களே ! அதனை ஆதரிக்கும் தோழர்களே ! இந்தக் கேள்விகளை எல்லாம் உங்கள் சிந்தனைக்கே விடுகிறோம்!
இனியும் காலம் தாழ்த்தாது AIPEDEU சங்கத்தில் இருந்து விலகிடுவீர் !
NFPE பேரியக்கத்தின் அங்கமான AIPEU GDS (NFPE ) இல் உடன் இணைந்திடுவீர் !
வாருங்கள் தோழர்களே !
கரம் ஒன்று சேர்ப்போம் !
களம் இனி ஒன்றாய் காணுவோம் !
தோழமையுடன்
R . தனராஜ் , மாநிலச் செயலர்.
குறிப்பு:- இதனை நகல் எடுத்து அந்தந்த கிளைகளில் உள்ள அனைத்து GDS தோழர்களுக்கும் வழங்கிட அன்புடன் வேண்டுகின்றோம்.
No comments:
Post a Comment